மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது! (படங்கள்)

0

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம் 13 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக டிரைவர் வேலை செய்துவந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் என்ஜினீயர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்பவரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இருதய தானம் பெறுவதற்காக அவருடைய குடும்பத்தினர் எதிர் நோக்கியிருந்தனர்.

லோகநாதனின் இருதயத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இருதயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து டாக்டர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் 20 டாக்டர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித்தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அளவில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம்புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் வழியெங்கும் போக்குவரத்து போலீசார் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 வினாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

இது குறித்து லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கூறும்போது, “என் மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காணமுடியும் என்று கருதினேன். எனவே, அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும்” என்றார்.

2008 ஆம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரையீரல்கள், 1 கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் 1 தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இதயங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் தானமாக பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

லோகநாதனின் இருதயம் வெற்றிகரமாக இளம்பெண் ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ”மாற்று இருதயம் பொருத்தப்பட்ட ஹவோபியா நலமுடன் உள்ளார்.

15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சையை செய்தது. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பெண் இன்னும் 5 நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். விரைவில் ஹவோபியா நலமுடன் வீடு திரும்புவார்” என்றனர்.

No comments

Movies Review: Detective Byomkesh Bakshy

  Cast: Sushant Singh Rajput, Anand Tewari, Swastika Mukherjee Direction: Dibakar Banerjee Rating: ***1/2 Detective Byomkesh Bakshy despite the sluggish pace makes for an engrossing ...