சனி பகவானின் பிறப்பு!

0

தலைமை நீதிபதி  சனி பகவான்:மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி…எவனாக இருந்தாலும் சரி…சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும்.

தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.

சனி பகவானின் பிறப்பு: சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார்! சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். திருப்பாற் கடலில் ஸ்ரீமந்நாராயணன் தேவி, பூதேவி சமேதராய் – திருவாழி திருச் சங்குடன், கவுஸ்துப, வனமால கேயூர கிரீடங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரின் நாபிக் கமலத்தில் நின்று சதுர்முக பிரம்மன் அவதரித்தார். பிரம்மதேவன், விஷ்ணுவின் ஆணைப்படி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கும் கர்த்தாவாக சத்தியலோகத்தில் எழுந்தருளினார். சிருஷ்டியின் மகிமையால் பிரம்மதேவன் மரீசி, அத்திரி, ஆங்கிரீஸ், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்னும் ஞானத் தவயோகியர்களைத் தோன்றச் செய்தார். அந்த மாமுனிவர்கள் சப்தரிஷிகள் என்னும் திருநாமத்தைப் பெற்றனர். சப்தரிஷிகளைப் படைத்த பிரம்மதேவன் தக்ஷப் பிரஜாபதி என்ற மகரிஷியையும் உலக ÷க்ஷமத்திற்காக சிருஷ்டித்து அருளினார். சப்தரிஷிகளில் மூத்தவரான மரீசி மகரிஷி. சம்பூதி என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் காசியப முனிவர் குமாரராகப் பிறந்தார். காசியப முனிவர், தக்ஷபிரஜாபதியின் குமாரத்தியான அதிதி என்பவளைத் திருமணம் செய்துக் கொண்டார். அதிதிக்கும், காசியப முனிவருக்கும் அநேக புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்கள் நல்ல தேஜஸைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறு அத்யந்த தேஜஸ் பொருந்திய காசியப புத்திரர்கள் துவாதச ஆதித்தியர்கள் என்ற திருநாமத்தைப் பெற்றனர். ஆதித்ய குமாரர்களில் மூத்தவர்தான் சூரிய பகவான்!

சூரிய பகவான் அழகானவர் – அவனிக்கு ஒளியாகத் திகழ்பவர் – சுவர்ண சொரூபமானவர் – பரமாத்மரூபிணியானவர் – தேஜோ மயமானவர்-ஆரோக்கியம், ஐசுவர்யம், கீர்த்தி, வெற்றி அனைத்தையும் அருளுபவர் – ஆயிரம் கிரணங்களைக் கொண்டவர் – சக்கராதி கிரகங்களுக்குத் தலைவன் – திவ்யமான ஏழு பச்சைக் குதிரைகள் பூட்டப் பெற்ற பொன் வண்ணத் தேரைச் செலுத்துபவர் – குரு குகனுக்கு ப்ரீதியானவர் என்றெல்லாம் போற்றப்படும் நவக்கிரக நாயகனாக விளங்குகிறார் சூரியபகவான்! பொன்மயமான சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, ஜம்பூத் துவீபத்தில் வடக்கு திக்காக எழுந்தருளி எங்கும் பேரொளி பரப்புகிறார். சூரியதேவன் உத்திராயண காலத்தில் இந்த சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்துக்கு எழுந்தருளுகிறார். விஷுக் கனியின் போது இரண்டுக்கும் நடுவேயிருந்து எழுந்தருளுகிறார். சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை நவில்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதியாமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.

சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும்.

(Continue to next page)

1 2 3

No comments