உளவுத்துறை அறிக்கை குறித்து மத்திய அரசு விசாரணை: உதயகுமாருக்கு வெளிநாட்டு நிதி வந்தது எப்படி?

0

சென்னை: இந்தியாவின் மின் உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்க, தன்னார்வ அமைப்புகளுக்கு, வெளிநாடுகளிலிருந்து பண உதவி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது’ என, மத்திய உளவுத் துறை (ஐ.பி.,) தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி, உள்துறை அமைச்சகங்கள், நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை செயலர் ஆகியோருக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது, மத்திய அரசு விசாரணையைத் துவக்கிஉள்ளது.

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்க்க, உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை, உளவுத்துறை பகிரங்கப்படுத்தி உள்ளது.நிதி உதவி:ஐ.பி., இணை இயக்குனர், சபி ஏ ரஸ்வி கையெழுத்திட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் செயல்படும், ‘கிரீன்பீஸ், கார்டெய்ட், அம்னஸ்டி, ஏக்சன் எய்டு, பி.யு.சி.எல்.,’ போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு, மேற்கத்திய நாடுகள் நிதி உதவி அளிக்கின்றன. அணு மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி போன்ற திட்டங்களை எதிர்த்து, போராடுவதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளில், அனல் மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்த, 45

கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டங்களால், நாட்டின் மொத்த வளர்ச்சி, 2 முதல் 3 சதவீதம் வரை பாதித்து உள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயகுமாருக்கு, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் நிதி உதவி அளித்துள்ளன. அமெரிக்காவின், ஒகியோ மாகாண பல்கலையின், கிர்வான் கல்வி நிலையம், உதயகுமாருடன், 2010 ஜூலையில், ஒப்பந்தம் செய்துள்ளது.

இனம், நிறம் மற்றும் வகுப்புவாத பிரச்னைகள் தொடர்பான, ஆலோசகராக பணியாற்ற இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. உதயகுமாரின் அமெரிக்க வங்கிக் கணக்கில், 2011 ஜூனில் 21,120 டாலரும், 2012 ஏப்ரலில், 17,600 டாலரும் செலுத்தப்பட்டுள்ளது; இந்திய மதிப்பில், 23.23 லட்சம் ரூபாய். போராட்டம் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளித்த தற்காக, இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. வெளி நாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போட, தன்னார்வ நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை கேடயங்களாக பயன்படுத்தி, போராட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை:உளவுத் துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, தன்னார்வ நிறுவனங்களை, முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள், மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர், பானுகோம்ஸ் கூறுகையில், ”சமூக வளர்ச்சித் திட்டங்களை, சில தன்னார்வ அமைப்புகள் நன்றாகவே செய்கின்றன. ஆனால், இது போன்ற குற்றச்சாட்டுகளும், தன்னார்வ அமைப்புகள் மீது எழுவதால், அவற்றை, அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும். லோக்பால் சட்டம் மறு சீரமைப்பு செய்யப்படும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார். மறு சீரமைப்பின் போது, தன்னார்வ அமைப்புகளையும், அச்சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்,” என்றார். உளவுத் துறையின் இந்த குற்றச்சாட்டுகளை, தன்னார்வ அமைப்புகள் மறுத்துள்ளன. ‘உளவுத்துறையின் அறிக்கை, தன்னார்வ அமைப்புகளை அழிக்கும் செயல்’ என, கிரீன்பீஸ் அமைப்பும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர். ‘என் மீது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உளவுத் துறை சுமத்தியுள்ளது. எனவே, இந்த அறிக்கை தொடர்பாக, மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்’ என, உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

 

No comments